Thursday, January 3, 2013

மிக்ஸ்டு வெஜிடபிள் சமோசா


சமோசாவிற்குத் தேவையானவை:

மேல்மாவு
ஃபில்லிங்
பொரிக்கத்தேவையான எண்ணெய்


மேல் மாவிற்குத் தேவையானவை:

மைதா_ஒரு கப்
உப்பு_தேவைக்கு
எண்ணெய்_2 டீஸ்பூன்
சமையல் சோடா_துளிக்கும் குறைவாக‌


செய்முறை:
மைதா,சமையல் சோடா,உப்பு மூன்றையும் இரண்டு முறை சலித்தெடுக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு மிதமான சூடானவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு மைதா கலவையைக் கொட்டி கிண்டவும்.
பிறகு கைகளால் மாவுக்கலவை ப்ரெட் க்ரம்ப்ஸ் மாதிரி வரும்வரை நன்றாகக் கலக்கவும்.
அடுத்து சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து பிசையவும்.சப்பாத்தி மாவு பதம் வந்ததும் மாவு முழுவதும் எண்ணெய் தடவி ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.
பிறகு மாவு முழுவதையும் உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடையில் சிறுசிறு பல்பு மாதிரி வெளியே தள்ளி கிள்ளிகிள்ளி வைக்கவும்.இது மாதிரி செய்தால் எண்ணெயில் பொரிக்கும்போது கீறலோ,வெடிப்போ இல்லாமல் இருக்கும்.
எல்லா மாவையும் இதேமாதிரி செய்து மூடி வைத்துவிட்டு ஃபில்லிங் செய்யத்தயாராவோம்.
ஃபில்லிங்/மசாலா செய்யத் தேவையானவை:

உருளைக்கிழங்கு_2
பச்சைப்பட்டாணி_ஒரு கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
பீன்ஸ்_5
வெங்காயத்தாள்_1
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_2
சின்ன வெங்காயம்_10
பச்சைமிளகாய்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_2
பட்டை_1
பிரிஞ்சி இலை_1
முந்திரி_ 10
சீரகம்
பெருங்காயம்


செய்முறை:
பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைக்கவும்.அடுத்த நாள் பட்டாணி,உருளை இவற்றை வேகவைக்க‌வும்.இவை வெந்து இறக்குமுன் கேரட்,பீன்ஸ் இவற்றை முழுதாகப் போட்டு பாதி வெந்ததும் எடுத்துவிடவும்.இவை ஆறியதும் விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டிவைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை அரிந்து வைக்கவும்.அவ்வாறே வெங்காயத்தாளையும் நறுக்கித் தனியாக வைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்க வேண்டியதை அடுத்தடுத்து சேர்த்து தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.இவை வதங்கியதும் பட்டாணி,நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு மிதமானத்தீயில் மூடி வேக வைக்கவும்.கலவை ட்ரையாக இருக்கட்டும்.இறுதியில் வெங்காயத்தாள் சேர்த்துக் கிளறி, எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இப்போது சமோசாவுக்கான ஃபில்லிங் தயார்.சமோசாவில் ஃபில்லிங் வைப்ப‌தற்குமுன் இதிலுள்ள பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை இவற்றை எடுத்துவிடவும். சாப்பிடும்போது கடிபடுமோ என பயந்துகொண்டே சாப்பிடாமல் இருக்கத்தான். சமோசா டிஸைனை பேப்பரில் செய்துகாட்டியுள்ளேன்.மாவை எடுத்து தேய்த்து அரை வட்டமாக வெட்டி அதில் ஒரு அரை வட்டத்தை எடுத்து அதன் ஓரம் முழுவதும் (கோடு போட்டுள்ள பகுதி)தண்ணீர் தொட்டு ஈரமாக்கவும்.ஒரு முனையை உள்நோக்கி மடிக்கவும்.அதேபோல் அடுத்த முனையையும் மடித்து நன்றாக ஒட்டவும்.இப்போது உள் பகுதியில் மசாலா வைக்கப் போதுமான கோன் போன்ற பகுதி தயார்.


இதனுள்ளே மசாலாவை வைத்து ஒட்டிவிட்டு,லேஸாக முன்னோக்கி மடித்துவிடவும்.இதேபோல் எல்லா மாவையும் செய்துவைக்கவும்.பிறகு அடுப்பில் எண்ணெய் வாணலை ஏற்றி சமோசாக்களைப் பொரித்தெடுக்கவும்.
கெட்சப்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More