Friday, January 25, 2013

பிஸிபேளாபாத்

தேவையானவை:
அரிசி_ஒரு கப்
துவரம் பருப்பு_1/2 கப்
விருப்பமான காய்கறிகள்_2 கப் (நறுக்கியது)
(ப.பட்டாணி,பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு,முருங்கைக்காய்,கத்தரிக்காய்)
சின்ன வெங்காயம் _10
தக்காளி_1
புளி_கோலி அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
பிஸிபேலாபாத் பொடி தயாரிக்க:
கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
கஸகஸா_ஒரு டீஸ்பூன்
கிராம்பு_1
பட்டை_1
லவங்கம்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
காரம்,மசாலா வாசனை அதிகம் வேண்டுமானால் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:
வெறும் வாணலியில் துவரம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.துவரம் பருப்பை வறுத்து செய்யும்போது நல்ல வாசனையாக இருக்கும்.
அரிசியில் புழுங்கலரிசியை எடுத்துக்கொள்வது நல்லது.நின்று வேகும்.
ஒரு குக்கரில் அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் கழுவிவிட்டு எப்போதும் சாதத்திற்கு  வைக்கும் தண்ணீரை விட கொஞ்சம் கூடுதலாக விட்டு,சிறிது மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பருப்பிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே பொடியைத் தயார் செய்துகொள்ளலாம்.
வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றைத் தனித்தனியாக வறுத்து,ஆறியதும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர்,சிறிது உப்பு சேர்த்து,காய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி காய் வெந்து வரும்வரை மூடி கொதிக்கவைக்கவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்திருப்பதால்  கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.
காய் வெந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப்போட்டுக் கலந்துவிட்டு ஒரு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
இப்போது காய்கறி கலவையை எடுத்து வெந்த பருப்புசாதத்தில் கொட்டிக் கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
இதற்கு உருளைக்கிழங்கு,மசால் வடை,அப்பளம்,வத்தல் என எல்லாமே நன்றாக இருக்கும்.
குறிப்பு:
பொடி செய்ய முடியவில்லையெனில் சாம்பாருக்குப்போடும் மிளகாய்த்தூளையேப் பயன்படுத்திக் கொள்ளலாம் . தாளிக்கும்போது மட்டும் கிராம்பு,பட்டை,லவங்கம் சேர்த்து  தாளித்துக்கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More