Friday, January 25, 2013

கேரட் சாதம்

தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி_1 கப்
கேரட்_பாதி
இஞ்சி_ஒரு மிகச்சிறிய துண்டு
பச்சை மிளகாய்_1
சின்ன வெங்காயம்_1
மிளகாய்த்தூள்_1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_1/4 டீச்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_ தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_2
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
பெருங்காயம்_சிறிது
செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து வடித்து உதிர் உதிராக ஆற வைத்துக்  கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை இரண்டாகவும்(அ)காரம் விரும்பினால் பொடியாகவும்,இஞ்சியைப் பொடியாகவும் நறுக்கிக்கொள்ளாவும்.கேரட் துருவியில் கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து இஞ்சி,பச்சை மிளகாயை ஒரு வதக்கு வதக்கி பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்.அடுத்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி,தேங்காய்ப்பால்,உப்பு  சேர்த்துக் கிளறி விடவும். இதில் ஆறிய சாதத்தைப் போட்டுக் கிளறி எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதற்கு veg, nonveg வறுவல்கள் அனைத்துமே நன்றாகப் பொருந்தும்.

கத்தரிக்காய் சாதம்

தேவையானப் பொருள்கள்:
அரிசி_2 கப்
கத்தரிக்காய்_5 சிறியது
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்
 செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கிய பின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி உப்பு,தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி,கத்தரிக்காய் வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.காய் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறி,கொத்துமல்லி தூவி சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கவும்.
இதற்கு அப்பளம்,வடாம்,உருளைக் கிழங்கு,முட்டை,சிக்கன் இவை எல்லாமே நன்றாக இருக்கும்.

காளான் புலாவ்

தேவையானப் பொருள்கள்:
பச்சரிசி(அ)பாசுமதி அரிசி_ஒரு கப்
காளான்_15 (எண்ணிக்கை)
பச்சைப் பட்டாணி_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு


தாளிக்க:
எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
பட்டை_ஒரு துண்டு
கிராம்பு_2
ஏலக்காய்_1
சீரகம்_1/4 டீஸ்பூன்
முந்திரி_5
செய்முறை:
அரிசியைத் தண்ணீரில் ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும்.ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
காளானை விருப்பமான‌ வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.வெங்காயம் நறுக்கி வைக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.
தாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து காளான்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வைக்கவும்.(பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை)
தண்ணீர் நன்றாக சூடேறி ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி வைக்கவும்.
மீண்டும் கொதி வரும்போது மூடியைத் திறந்து எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இப்பொழுது அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.
இப்பொழுது சுவையான காளான் புலாவ் தயார்.
இதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி நன்றாகப் பொருந்தும்.

பிஸிபேளாபாத்

தேவையானவை:
அரிசி_ஒரு கப்
துவரம் பருப்பு_1/2 கப்
விருப்பமான காய்கறிகள்_2 கப் (நறுக்கியது)
(ப.பட்டாணி,பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு,முருங்கைக்காய்,கத்தரிக்காய்)
சின்ன வெங்காயம் _10
தக்காளி_1
புளி_கோலி அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
பிஸிபேலாபாத் பொடி தயாரிக்க:
கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
கஸகஸா_ஒரு டீஸ்பூன்
கிராம்பு_1
பட்டை_1
லவங்கம்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை
காரம்,மசாலா வாசனை அதிகம் வேண்டுமானால் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:
வெறும் வாணலியில் துவரம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.துவரம் பருப்பை வறுத்து செய்யும்போது நல்ல வாசனையாக இருக்கும்.
அரிசியில் புழுங்கலரிசியை எடுத்துக்கொள்வது நல்லது.நின்று வேகும்.
ஒரு குக்கரில் அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் கழுவிவிட்டு எப்போதும் சாதத்திற்கு  வைக்கும் தண்ணீரை விட கொஞ்சம் கூடுதலாக விட்டு,சிறிது மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பருப்பிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.
சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே பொடியைத் தயார் செய்துகொள்ளலாம்.
வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றைத் தனித்தனியாக வறுத்து,ஆறியதும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர்,சிறிது உப்பு சேர்த்து,காய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி காய் வெந்து வரும்வரை மூடி கொதிக்கவைக்கவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்திருப்பதால்  கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.
காய் வெந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப்போட்டுக் கலந்துவிட்டு ஒரு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
இப்போது காய்கறி கலவையை எடுத்து வெந்த பருப்புசாதத்தில் கொட்டிக் கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
இதற்கு உருளைக்கிழங்கு,மசால் வடை,அப்பளம்,வத்தல் என எல்லாமே நன்றாக இருக்கும்.
குறிப்பு:
பொடி செய்ய முடியவில்லையெனில் சாம்பாருக்குப்போடும் மிளகாய்த்தூளையேப் பயன்படுத்திக் கொள்ளலாம் . தாளிக்கும்போது மட்டும் கிராம்பு,பட்டை,லவங்கம் சேர்த்து  தாளித்துக்கொள்ளலாம்.

இட்லி உப்புமா

தேவை:
இட்லி_5
சின்ன வெங்காயம்_5
கடுகு_ 1/4 டீஸ்பூன்
உளுந்து_1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு_1 டீஸ்பூன்
பெருங்காயம்_ துளி
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_சிறிது
உப்பு_துளி
எண்ணெய்_1 டீஸ்பூன்
 செய்முறை:
இட்லியை உதிர்த்துக்கொள்ளவும்.சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு,உளுந்து,கடலைப் பருப்பு, பெருங்காயம்,காய்ந்த மிளகாய்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து வதக்கி இட்லி உதிரியைக் கொட்டிக் கிளறி சூடேறியதும் இறக்கவும்.
குறிப்பு:
இட்லியில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வெங்காயத்திற்கு மட்டும் உப்பு சேர்க்கவும்.இட்லியும் ஏற்கனவே வெந்து இருப்பதால் சூடேறியவுடன் இறக்கிவிடலாம்.

அவல் உப்புமா

தேவையானப் பொருள்கள்:
அவல்_2 கப்
சின்ன வெங்காயம்_5
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்_ஒரு துளி
கடலைப்பருப்பு_1 டீஸ்பூன்
வேர்க்கடலை_2 டீஸ்பூன்
முந்திரி_3
பச்சை மிளகாய்_1
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
 செய்முறை:
முதலில் அவலைத் தண்ணீரில் கொட்டி இரண்டு அல்லது மூன்று முறை அலசி கழுவிவிட்டு  தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து  ஊற வைக்கவும்.(மஞ்சள் தூள் சேர்ப்பதாக இருந்தால் அவல் ஊறும்போதே சேர்க்கவும்.) சீக்கிரமே ஊறிவிடும்.சுமார் ஒரு 5 நிமிடம் போதுமானது.நன்றாக ஊறியதும் தண்ணீரிலிருந்து பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும்.அவலைப்  பிழிந்தெடுத்தால்  குழையக் கூடாது.ஊறாமலும் இருக்கக்கூடாது.இவ்வாறு இருந்தால்தான் உப்புமா கட்டிகளில்லாமல் பொலபொலவென்று நன்றாக வரும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வங்கியதும் அவலை சேர்த்துக் கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.அவல் ஏற்கனவே ஊறி இருப்பதால் தண்ணீர் சேர்க்கக் கூடாது.அவலில் ஏற்கனவே உப்பும் சேர்த்திருப்பதால் ஒரு துளி மட்டும் லேசாக தெளித்து விடவும்.அவல் சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலைத் தூவி இறக்கவும்.இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.
நீண்ட நேரம் அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம்.மேலும் மூடியும் போட வேண்டாம்.அவ்வாறு செய்தால் குழைந்து விடும்.
குறிப்பு:
அவல் ஊறும் போதே உப்பு சேர்த்தால்தான் நன்றாக இருக்கும்.செய்முறையைப் பார்ப்பதற்குத்தான் நீளமாக உள்ளது.ஆனால் செய்வது மிகவும் சுலபம்.
இங்கு கறிவேப்பிலையை fresh   ஆக பார்ப்பதே அதிசயம்.சில சமயங்களில்தான் அவ்வாறு கிடைக்கும்.அப்படி கிடைத்தபோதுதான் ஒரு ஆர்வக்கோளாறில் ஒரு முழு குச்சியைப் போட்டுவிட்டேன்.

கோதுமை உப்புமா

தேவையானவை:
உடைத்த கோதுமை_2 கப்
சின்ன வெங்காயம்_5
பச்சை மிளகாய்_2
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி(விருப்பமானால்)
தக்காளி_1/4 பாகம்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தாளிக்க:
நல்லெண்ணெய்_1 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
முந்திரி_5
பெருங்காயம்
கறிவேப்பிலை
 செய்முறை:
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.கோதுமையை நன்றாக சூடு வர வறுத்துக்கொள்ளவும். வெங்காயம்,இஞ்சி இவற்றைப் பொடியாகவும்,பச்சை மிளகாயை நீள வாக்கிலும் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கித் தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து  வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி,பட்டாணி சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என 4 கப்புகள் தண்ணீரை அளந்து ஊற்றவும்.மிதமானத் தீயில் மூடி போட்டு வேக விடவும்.
சிறிது நேரம் கழித்துத் தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.அப்போது பட்டாணி வெந்துவிட்டதா எனப் பார்த்து அது வெந்தவுடன் கோதுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.இது ரவை மாதிரி கட்டித் தட்டாது.எனவே பொறுமையாகவேக் கிளறலாம்.நன்றாகக் கிளறி உப்பு சேர்த்து மூடி மீண்டும் வேக வைக்கவும். அடிப் பிடிக்காதவாறு பார்த்துக்கொள்ளவும்.நன்றாக வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லித் தூவி இறக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னிதான் பெஸ்ட் காம்பினேஷன்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More